

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (டிச. 24) காணொலி வாயிலாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் மற்றும் அதிகாரிகள் கேட்டனர். மாவட்டத்தில் அந்தந்த வட்டாரங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் தலைமையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகள் கண்களில் கருப்பு துணிகளை கட்டிக் கொண்டு, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தஞ்சாவூரில் பங்கேற்ற விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், "கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும். கரும்புக்கான ஊக்கத் தொகையை வங்கியில் பழைய கடனில் வரவு வைக்காமல், விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்" என்றார்.
பூதலூரில் பங்கேற்ற விவசாயி வெ.ஜீவக்குமார் கூறுகையில், "அக்னி ஆறு கோட்டத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பி பாசன கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும். வயல்களில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதால், அதனை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழை மகசூல் அதிகமாக இருப்பதால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுவதால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்" என்றார்.
இதே போல், மாவட்டத்தின் பல இடங்களில் பங்கேற்ற விவசாயிகள், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர், நிலக்கடலைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வடிகால் ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும், சம்பா அறுவடை தொடங்கியுள்ளதால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி வாயிலாக பதில் அளித்தனர்.