

வேலூரில் ஆவின் மேலாளர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதான வழக்கில், வேலூரில் இருந்து நெல்லைக்கு பணியிட மாறுதலாகிச் சென்ற ஆவின் பொது மேலாளர் கணேசா கைது செய்யப்பட்டார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பால் கொள்முதல் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்த ரவி (55) என்பவர், ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினரால் நேற்று (டிச. 23) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ.50 ஆயிரம் லஞ்சப் பணத்தை வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றி சமீபத்தில் நெல்லை ஆவின் பொது மேலாளராக பணியிட மாறுதலில் சென்ற கணேசா (57) என்பவருக்காக வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, நெல்லையில் தங்கியிருந்த ஆவின் பொது மேலாளர் கணேசாவை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் இன்று (டிச. 24) கைது செய்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் கூறும்போது, "ஆவின் நிர்வாகத்துக்காக திருவண்ணாமலையில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஓட்டி வந்த முருகையன் (55) என்பவருக்கு கடந்த 2019-ம் ஆண்டில் ரூ.1.81 லட்சம் நிலுவைத் தொகை வழங்க வேண்டி இருந்தது. கடந்த ஆண்டு வேலூர் ஆவின் இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு தனியாக இயங்கி வருகிறது. எனவே, நிலுவைத் தொகையை வழங்காமல் பொது மேலாளர் கணேசா காலம் கடத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில், நெல்லை ஆவின் பொது மேலாளராக கணேசா பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் முருகையனுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1.81 லட்சத்துக்கான காசோலை தயார் செய்யப்பட்டது. அதில் கையெழுத்திட்ட கணேசா, ரூ.50 ஆயிரம் பணத்தை மேலாளர் ரவியிடம் கொடுத்துவிட்டு காசோலையை பெற்றுக்கொள்ளும்படி முருகையனிடம் கூறியுள்ளார். ஆனால், லஞ்ச ஒழிப்புப் பிரிவில் முருகையன் புகாரளித்ததால் ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை முதலில் பெற்றுக்கொண்ட ரவியும், பின்னர் கணேசாவும் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் கைது செய்யப்பட்ட கணேசா இன்று வேலூருக்கு அழைத்து வரப்பட்டார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என்பது தொடர்பாக வேலூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர் வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியில் இருந்தபோது கையாண்ட முக்கிய கோப்புகளில் ஏதாவது முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.