

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசுகளின் மூலமே வழங்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (டிச.24) வெளியிட்ட அறிக்கை:
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த டிசம்பர்-07 அன்று மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட போராட்டத்துக்குப் பிறகு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்னும் கல்வி உதவித்தொகை திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரப்போவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது.
இதற்கென 59 ஆயிரத்து 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென்றும், 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதிச் சுமையைப் பகிர்ந்துகொள்ளும் என்றும், அதன்படி, 35 ஆயிரத்து 534 கோடி ரூபாயை மத்திய அரசும், மீதமுள்ள தொகையை மாநில அரசுகளும் செலவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு
கல்வி உதவித்தொகையில் மத்திய அரசு தனது பங்கான 60% தொகையை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமென்றும், அதுபோல, மாநில அரசுகள் 40% தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் முடிவெடுத்துள்ளனர்.
இது உரிய காலத்தில் மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, மத்திய அரசு நேரடியாக உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்குவது மாநில அரசுகளைப் புறக்கணிப்பதாகவும் பொருள் கொள்ளப்படும்.
எனவே, மத்திய அரசு தனது பங்குத் தொகையை மாநில அரசுகளிடம் அளித்து அவற்றின் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதே முறையாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொடர்பான இந்த முடிவின்படி எதிர்வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் ஒரே அளவு நிதியை ஒதுக்கினால் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காத நிலை ஏற்படும்.
எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் இதற்கான நிதியில் 10% நிதியையாவது உயர்த்தி ஒதுக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அம்பேத்கர் போராடிப் பெற்ற இந்த போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்ற உரிமையை இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் கைவிடக்கூடாது என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.