குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டம் ரத்து; அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? - அமைச்சர்களுக்கு ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா என, அமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று முன் தினம் (22-ம் தேதி) தெரிவித்தார். இதன்படி வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும், திருமண மண்டபங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் குப்பை கொட்டும் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டுப்படாவிட்டால், திமுக ஆட்சி அமைந்தவுடன், குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின்றிவித்தார்.

இந்நிலையில், குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (டிச. 24) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (டிச. 24) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி!

'குப்பை கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், திமுக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?

'எண்ணித்துணிக கருமம்' என அதிமுக அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in