

ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே எம்ஜிஆர் நினைவைப் போற்றும் வழி என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-வது நினைவு தினம் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். மேலும், எம்ஜிஆர் நினைவு தின உறுதிமொழியையும் ஏற்றனர்.
அதேபோன்று, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எம்ஜிஆரை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் எம்ஜிஆரை நினைவுகூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக, கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், "நாற்பதாண்டுகளுக்கு முன்னரே தொடங்கிய நற்பணிகளுக்கான ஊக்கம் மக்கள் திலகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது. நாளை நமதே எனும் எமது ஆப்த வாக்கியம் அவர் ஈந்தது. ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி. நாம் அதைச் செய்வோம். #இனி_நாம்" என பதிவிட்டுள்ளார்.