

சமூக அடிமைத்தனம் தொடரும் வரை, ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 24), பெரியாரின் 47-வது நினைவுநாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:
"சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியாரின் 47-வது நினைவு நாள் இன்று!
சமூக அடிமைத்தனம் தொடரும் வரை, ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்!
அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.