

ஆம்னி பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். இதற்காக பலர் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல, அரசு விரைவுப் பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் பட்டாசுகளை ஏற்றிச் செல்லக் கூடாது என ஏற்கெனவே அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி, ஆம்னி பேருந்துகளில் வியாபாரிகளும், சொந்த பயன்பாட்டுக்காக பொதுமக்களும் பட்டாசுகளை ஏற்றிச் செல்ல அனுமதித்தால் சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து கண்காணிக்க விரைவில் சிறப்பு குழுக்களை நியமிக்க உள்ளோம். உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆம்னி பேருந்துகளில் பட்டாசு கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்றனர்.