Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM

சட்டத்துறைக்கு ஏன் நோபல் பரிசு கிடைப்பதில்லை?- பணி நிறைவு பாராட்டு விழாவில் வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி ஆதங்கம்

பல்வேறு துறை ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்போது, சட்டத் துறைக்கு ஏன் அந்தப் பரிசு வழங்கப்படுவதில்லை என்பதை வழக்கறிஞர்கள் யோசிக்க வேண்டும் என தனது பணி நிறைவு பாராட்டு விழாவில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ஏ.பி.சாஹி, வரும் 30-ம்தேதியுடன் பணிஓய்வு பெறுகிறார்.இன்று முதல் உயர் நீதிமன்றத்துக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்குவதால், நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு பிரிவு உபச்சார விழா உயர் நீதிமன்றம் சார்பில் காணொலி மூலம் நடைபெற்றது.

இவ்விழாவில் சக நீதிபதிகள் பங்கேற்றனர். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பேசும்போது,“கரோனா காலத்திலும் தலைமைநீதிபதி அதிகப்படியான வழக்குகளை விசாரித்து சிறந்த நிர்வாகத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.

பின்னர் தலைமை நீதிபதி ஏற்புரையாற்றி பேசியதாவது: எனக்குஉதவிகரமாக இருந்த சக நீதிபதிகள், ஒத்துழைப்பு வழங்கிய வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு துறைகளின் ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்போது, சட்டத் துறைக்கு மட்டும் ஏன் அந்தப்பரிசு வழங்கப்படுவதில்லை என்பதை வழக்கறிஞர்கள் யோசிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பு இருந்தால் நானும் உங்களுடன் கைகோர்க்கத் தயார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் பணிவும், எளிமையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. பணியில் உள்ள விஞ்ஞானிகள் ஒருபோதும் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காக ஓய்வுபெற்ற விஞ்ஞானிகள் ஆலோசனைகளை வழங்குவது பெருமைக்குரிய விஷயம். அதேபோல நீதித்துறையிலும் நடக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

கரோனா பாதிப்பின்போது தனக்கு சிகிச்சையளித்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த விழாவில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், மெட்ராஸ் பார் அசோசியேஷன், சென்னை வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 30-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஏ.பி.சாஹி மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, திமுக உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x