

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்குவந்தால் அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவீத இடம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவர்கமல்ஹாசன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை அடையாறில் நேற்று நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். ஆனால், பெண் எம்.எல்.ஏ.க்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். பெண்கள் நினைத்தாலே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவையிலும், அமைச்சரவையிலும் பெண்களுக்கு 50 சதவீத இடம் வழங்கப்படும். அதற்கு அதிகமான பெண்கள் ம.நீ.ம. கட்சியில் இணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தவழக்கறிஞர் அணி கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
நான் சினிமாவிலேயே நேர்மையை விட்டுக் கொடுக்காதவன். கருப்பு பணத்தை ஊதியமாக பெறாத ஓரிரு நடிகர்களில் நானும் ஒருவன். உச்ச நீதிமன்றத்தை எளிய மனிதர்களும் அணுகும் வகையில் தமிழகத்தில் டிஜிட்டல் நீதிமன்றம் அமைக்க வேண்டும். சென்னையிலேயே வழக்குப் பதிவு, வாதாடுதல் போன்றவற்றை செய்யும் வகையில் அலுவலகம் அமைக்க வேண்டும். சாமானிய மனிதனுக்கு நீதி கிடைப்பதற்கான தொலைவும், தொல்லையும் குறைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தின் ஒரு மூலையில் சாமானியன் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகள் நீதிமன்ற எல்லை என்ற பெயரில் நாட்டின் இன்னொரு மூலைக்கு இழுத்தடிக்கப்படும் நிலை மாற வேண்டும். வழக்குகள் அந்தந்தப் பகுதிகளில் அருகாமை நீதிமன்றங்களிலேயே நடத்தப்பட வேண்டும். வழக்கறிஞர் சேம நல நிதி ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும். வழக்கறிஞர் நல வாரியம் அமைக்க வேண்டும்.