

பெருமாள் கோயில்களில் நாளை வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி பெருமாள் கோயில்களில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிச.14-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. டிச.15-ம் தேதி பகல்பத்து திருநாள் தொடங்கியது. நாளை(டிச.25) சொர்க்க வாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
நாளை அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகைக்கு பிரவேசிக்கவுள்ளார். அன்று முதல் ராப்பத்து திருநாள் தொடங்குகிறது.
கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, இன்று (டிச.24) மாலை 6 மணி முதல் நாளை(டிச.25) காலை 8 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்க வாசல் வழியாக செல்வதற்கும், மூலவர் முத்தங்கி சேவைக்கும், இலவச மற்றும் கட்டண தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகளை srirangam temple என்ற யூடியூப் சேனலிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தொடர்ந்து, ராப்பத்து 7-ம் திருநாளான டிச.31-ம் தேதி திருக் கைத்தல சேவையும், ஜன.1-ம்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், ஜன.3-ம் தேதி தீர்த்தவாரி, ஜன.4-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை நடைபெறவுள்ளன.