

நாட்டின் முதல் ஐபிஎஸ் அதிகாரி யும் தமிழக முன்னாள் டிஜிபியு மான கே.ஆர்.செனாய் நேற்று காலமானார். அவருக்கு வயது 93.
சென்னையில் 1922-ல் பிறந்த கே.ஆர்.செனாய், சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்தார். 1943-1947ம் ஆண்டுகளில் இந்திய விமானப் படை, கடற்படையில் பணிபுரிந்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1947-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமை யைப் பெற்றார். 1948-ல் தமிழக காவல் துறையில் உதவி கண் காணிப்பாளராக பணியைத் தொடங்கினார்.
தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., மாநில போலீஸ் குடும்பநல அமைப் பின் செயலாளர், கோவை மற்றும் மதுரை சரக டிஐஜி, சிபிஐ டிஐஜி, ரயில்வே டிஐஜி, ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.
லஞ்ச ஊழல் தடுப்பு துறையின் இயக்குநர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது திறமையை பாராட்டி 1971-ல் காவல் துறைக்கான குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. சென்னை நகர காவல் ஆணைய ராக 1971 முதல் 1975 வரை பணி யாற்றினார். கடைசியாக தமிழக டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.
சென்னை அண்ணா நகர் கமலா கார்டனில் குடும்பத்துடன் வசித்துவந்த கே.ஆர்.செனாய் நேற்று காலமானார்.
செனாயின் இறுதிச் சடங்கு அண்ணா நகர் புதிய ஆவடி சாலை யில் உள்ள மின் மயானத்தில் நேற்று மாலை நடந்தது. அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதை செலுத்தப்பட்டது. டிஜிபி அசோக் குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.