

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 108 இடங்களில், திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ காணொலிப் பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
காரைக்குடியில் நடந்த கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் காணொலிக் காட்சி மூலம் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அதிமுக ஆட்சியில் ஏதாவதொரு திட்டம் கொண்டு வந்தார்கள் எனச் சொல்ல முடியுமா?
தான் விவசாயி எனக்கூறும் முதல்வர் கே.பழனிசாமி, பணம், ஊழலைத்தான் அறுவடை செய்கிறார். தமிழக ஆளுநரிடம் ஊழல் பட்டியலைக் கொடுத்துள்ளோம். இது முதல் பட்டியல்தான். இந்தப் பட்டியல் தொடரும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அவர் மட்டுமின்றி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, காமராஜ், ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோரும் ஊழல் செய்துள்ளனர். அந்த ஆதாரங்களை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.
உழவர்களே இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. அதை பழனிசாமி ஆதரிக்கிறார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை நமது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கே.ஆர்.பெரியகருப்பன் 502 மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார். அதில் ரூ.10 ஆயிரம் ரொக்கம், வேட்டி (அ) சேலை, சால்வை, பதக்கம் போன்றவை இருந்தன. முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், நகரச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.