

வன்னியர்களுக்கு 20 சதவீத தனிஇட ஒதுக்கீடு கோரி 3-வது கட்டமாக தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள், மண்டல அலுவலகங்கள் முன்பு பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 528 பேரூராட்சிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுத்தனர். சென்னை அடையாறில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில், வடக்கு மண்டல இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஜி.கே.மணி தலைமையிலான குழுவினர் மண்டல துணை ஆணையர் ஆல்பி ஜானை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல், சென்னையில் உள்ள மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அரசு ஆணையம் அமைக்க உறுதி
ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி பேசும்போது, “அரசுத் துறை செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. எங்களுடைய போராட்டத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு ஆணையம் அமைப்பதாக சொல்லியிருக்கிறது. தேர்தல் வருவதால் தாமதமாகும்.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் புள்ளி விவரங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் பொருளாதாரத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உடனடியாக 20 சதவீத தனிஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு வழங்கியதைப்போல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.
செங்கை, காஞ்சியில்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேரூராட்சி நிர்வாக அலுவலகங்கள் முன்பும் திருவள்ளூரில் பல்வேறு இடங்களிலும் பாமகவினர் மனுக்களை வழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக, பேரூராட்சி அலுவலகங்களின் முன்பு போலீஸார் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.