

தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் தென்மாவட்டங்களில் 2 நாட்கள் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம், தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமியின் இல்லவிழாவிலும் முதல்வர் பங்கேற்கும் பயண திட்டங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தன.
முதல்வர் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்திறங்குவதற்கு முன் சென்னையில் தமிழக ஆளுநரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அக் கட்சி தலைவர்கள் சந்தித்து, அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை அளித்ததும் அரசியல் களம் பரபரப்பானது.
அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்துதான் திமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் தெரிவித்தார். அடுத்து திருநெல்வேலிக்கு அவர் வந்தபோது, வரவேற்க திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினர் மத்தியில் பேசுவதற்காக காரிலிருந்து இறங்கி திறந்த ஜீப்பில் சென்றார். அங்கு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்லும் வழிநெடுக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழியிலும் மக்களை அவர் நேரடியாக சந்தித்தார்.
மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் நாகர்கோவிலில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அருமனையில் இரவு 11 மணியைத்தாண்டியும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பங்கேற்று பேசிவிட்டு திருநெல்வேலி திரும்பினார். இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வரும், அமைச்சர்களும் சளைக்காமல் பங்கேற்றனர்.
2-வது நாளில் சங்கரன்கோவிலுக்கு சென்று அமைச்சரின் இல்ல விழாவில் அதிமுகவின் சாதனைகளை முதல்வர் பட்டியலிட்டார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் முதல்வர் மேற்கொண்ட பயணம் தேர்தல் பிரச்சார பயணமாகவே உணரப்பட்டது.
கனிமொழி பிரச்சாரம்
முதல்வரின் இந்த பயணத்தின்போதுதான் திமுக எம்.பி. கனிமொழியும் திருநெல்வேலி மாவட்டத்தில் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அதிமுகஅரசு மீது அதிரடியாய் பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் சொல்லி திமுகவுக்கு அவர் ஆதரவு திரட்டினார். கல்வியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் என்று பலதரப்பட்டவர்களையும் அவர் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தேர்தல் பிரச்சாரத்துக்கென்றே தயாரிக்கப்பட்ட வேனில் சென்று கூட்டங்களில் பங்கேற்று பேசினார். ஆங்காங்கே உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு சென்று தேநீர் அருந்தினார். கிராமசபை கூட்டங்களை நடத்திகுறைகளை கேட்டார். அவரது பயணத்திட்டமும் தேர்தல் களத்தில் திமுகவினரை உந்திதள்ளியிருக்கிறது.
தொண்டர்கள் உற்சாகம்
கொடித்தோரணங்கள், வரவேற்பு பதாகைகள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் என்று அதிமுகவும், திமுகவும் தங்கள் பலத்தைகாட்டியிருந்தன. முதல்வரின் பயணத்திட்டத்தால் அதிமுகவினரும், கனிமொழியின் பிரச்சாரத்தால் திமுகவினரும் உற்சாகமாக பணியாற்றினர். தென் மாவட்டங்களில் தேர்தல்திருவிழா பரபரப்பாகவே தொடங்கி யிருப்பதை பார்க்க முடிகிறது