மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்ப்பதா?

மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்ப்பதா?
Updated on
1 min read

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடுவதுபோல கருத்து தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு தமிழக கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர்)

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, மிகவும் கடுமையான எதிர்ப்பை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதே கருத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிரான இவர்களின் கருத்தைக் கண்டிக்கிறோம். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் யோசனை எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. இதற்கு மாறாக, மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் பாஜக அரசும், தமிழகத்துக்கு விரோதமாக செயல்படுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

எனவே, இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக எம்.பி.)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமே மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் கூறியிருப்பது, மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். அரசியல் சட்டத்தின்படி, மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவானவர்களாக செயல்பட வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து பல மாநில அரசுகள் மேல்முறையீடு செய்துள்ள போதிலும், இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளி யிடவோ, அதில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட அமைப்புகளை அமைக்கவோ எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in