

வெளிநாடுகளில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்துள்ள 12 பேரில் 10 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
கரோனா உருமாற்றம் அடைந்து, வளரும் நாடுகளில் தற்போது வேகமாகப் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சமீபத்தில் 12 பேர் வந்துள்ளனர். அவர்களில் 10 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைத் தினசரி கண்காணிக்க மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் கரோனா உருமாற்றம் அடைந்து, வேகமாகப் பரவி வருகிறது. இதற்கிடையே அங்கிருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்த 2 பேர், வந்த அடுத்த நாளே கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவிலுக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் இருக்கும் இடம் குறித்து அந்தந்த மாவட்டச் சுகாதாரத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கேயே அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளவும், பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவர்களைத் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.