

வழக்கறிஞர்கள் கருப்புக் கோட்டு மற்றும் காலர் அணிந்து போராட்டம் நடத்தத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அணிய வேண்டிய உடை குறித்து பார் கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியில் கூறப்பட்டுள்ளவாறுதான் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது பிரத்யேக ஆடை அணிய வேண்டும். இருப்பினும் இந்த விதிப்படி வழக்கறிஞர்கள் உடை அணிவதில்லை.
உடைக் கட்டுப்பாட்டை மீறிப் பல வழக்கறிஞர்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ், பட்டுச் சேலையுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுகின்றனர். போராட்டங்களில் வழக்கறிஞர்கள் அங்கி, கோட்டு, காலர் ஆகியவற்றை அணிந்து பங்கேற்கின்றனர். இதனால் வழக்கறிஞர்கள் தொழிலுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.
எனவே, அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது பார் கவுன்சில் விதிகளில் கூறப்பட்டுள்ள ஆடைகளை அணியவும், ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் அங்கி, கோட்டு, காலர் அணிந்து பங்கேற்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டு, காலர் அணியத் தடை விதித்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.