

ஆளும்கட்சி மீது கடும் கோபத்தில் இருக்கும் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று விருத்தாசலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 3 தினங்களாக கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று (டிச. 23) கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நெய்வேலியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், நெய்வேலியில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இளைஞரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "இளைஞர்களிடம் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. உங்களது எதிர்பார்ப்புகளைp பூர்த்தி செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை. நீங்கள் கூட்டத்திற்கு வந்தோம் சென்றோம் என்றில்லாமல், ஆளும்கட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறி திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்றார்.
அதைத்தொடர்ந்து, பெரியாகாப்பான்குளம் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பதாகையில் கையெழுத்திட்டார். தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் கையெழுத்திட கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, விருத்தாசலத்தில் கடலூர் மேற்குமாவட்டச் செயலாளர் வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி, இங்கு காணும் கூட்டத்தை பார்க்கும் போது, மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டதை உணர்த்துவதாகவும், தான் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் திரண்டு வரவேற்பு அளிப்பதாகவும் கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா வெளியே வரும் நிலையில், இந்த ஆட்சியாளர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு எனவும், திமுக அளித்துள்ள ஊழல் புகாரால் ஆட்சியாளர்கள் மிரண்டு போயிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு, விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துவது, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக, மறைந்த திமுக முன்னோடிகளான நெய்வேலி ராமகிருஷ்ணன், விருத்தாசலம் குழந்தை தமிழரசன், மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று அவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.