

பால் விநியோகம் செய்த வேன் வாடகைக்கான காசோலையை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் மேலாளரை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சொரக்கொளுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகய்யன் (50). இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலை, வேலூர் ஆவின் நிறுவனத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பால் குளிரூட்டும் மையத்துக்கு எடுத்துச்செல்லும் வேலை செய்து வந்தார். இதற்காக இவருக்கு, ஒரு லிட்டருக்கு 40 பைசா வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வேலூர் ஆவின் நிறுவனம் சார்பில் முருகய்யனுக்கு வேன் வாடகை பணம் ரூ.1.81 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த தொகையைக் கேட்டு முருகய்யன் ஆவின் அலுவலகத்தில் ரசீது வழங்கியிருந்தார். இதற்கான காசோலை கடந்த வாரம் தயாரானது.
ஆவின் நிறுவனத்தின் அலுவலக மேலாளராக பணியாற்றி வரும் வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ரவி (54) என்பவர், ரூ.1.81 லட்சத்துக்கான காசோலையை வழங்க முருகய்யனிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதைத்தொடர்ந்து, நடந்த பேரத்தை ஏற்காத மேலாளர் ரவி, ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே காசோலை வழங்கப்படும் என முருகய்யனிடம் கறாராகக் கூறியதாகத் தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகய்யன் இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அவர்களது அறிவுறுத்தல் பேரில், ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் முருகய்யன் இன்று (டிச. 23) காலை ஆவின் நிறுவனத்துக்கு வந்தார்.
அப்போது, தனது அறையில் பணியில் இருந்த மேலாளர் ரவியிடம் ரூ.50 ஆயிரத்தை வழங்கியபோது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர்கள் விஜய் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆவின் மேலாளர் ரவியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பிறகு, மேலாளர் ரவியின் அறை, வாகனம் ஆகியவற்றை சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஏற்கெனவே பல்வேறு முறைகேடுகள் நடந்து வரும் நிலையில், அலுவலக மேலாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.