80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்குமுறை அளித்தால் முறைகேடுகள் ஏற்பட வாய்ப்பு: இரா.முத்தரசன் கருத்து

தஞ்சாவூரில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மாவட்ட குழு கூட்டத்தில் பேசுகிறார். அருகில் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி மற்றும் பலர் உள்ளனர்.
தஞ்சாவூரில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மாவட்ட குழு கூட்டத்தில் பேசுகிறார். அருகில் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி மற்றும் பலர் உள்ளனர்.
Updated on
1 min read

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த உரிமை அளித்தால் முறைகேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று (டிச. 23) நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள், எதிர்கால திட்ட அறிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் இரா.முத்தரசன் கூறியதாவது:

"டெல்லியில் விவசாயிகள் 4-வது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தினைப் பிளவுபடுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இந்தப் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் இந்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை என்ற கருத்தைக் கூறுவதை இனியும் பேசக்கூடாது. தன் நிலையை அவர் மாற்றி்க் கொள்ள வேண்டும். காவல் துறை மூலம் போராட்டத்தை அடக்குவதை அரசு கைவிட வேண்டும்.

இந்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூரில் வரும் 29-ம் தேதி பேரணி மற்றும் மாநாடு, காவல் துறை அனுமதி அளிக்க மறுத்தாலும் திட்டமிட்டபடி நடைபெறும். கேரளாவில் இந்த சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட அம்மாநில ஆளுநர் அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை இந்திய தேர்தல் பார்வையாளர்கள் குழுவினரிடம் நாங்கள் கொடுத்துள்ளோம்.

தமிழகத்தில் ஜனநாயகப் பூர்வமாக, நியாயமாக, பணபலமின்றி தேர்தல் நடத்திட வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கராோனாவைக் காரணம் காட்டி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் முறைகேடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த முறை நிராகரிக்கப்பட வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in