Last Updated : 23 Dec, 2020 03:05 PM

 

Published : 23 Dec 2020 03:05 PM
Last Updated : 23 Dec 2020 03:05 PM

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் இன்று தொடங்கி வைப்பு

அரியலூர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைக்கிறார், அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன். உடன் ஆட்சியர் த.ரத்னா.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் வெள்ளுர், திருமழபாடி, சிலுப்பனூர், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தண்டலை ஆகிய 5 கிராமங்களில் சுகாதாரத்துறையின் சார்பில், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தலைமையில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலையில், தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களையும், வருவாய்த்துறையின் சார்பில் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சார்பில் 2 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விபத்து உதவித்தொகையினையும் வழங்கினார்.

தொடர்ந்து ராஜேந்திரன் பேசுகையில், 'நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்ற அடிப்படையில் நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தரவேண்டும் என்ற உண்ணத நோக்கில் ஜெயலலிதாவின் சீரிய வழியில் செயல்படும் தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளில், மக்களுக்குச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்கக்கூடிய அளவுக்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோரைக் கொண்டு அம்மா மினி கிளினிக்குகள் செயல்படவுள்ளன.

அரியலூர் மாவட்டத்துக்கு 22 அம்மா மினி கிளினிக் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 4 நடமாடும் மினி கிளினிக்குகளாகவும் செயல்படவுள்ளது. முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 அம்மா மினி கிளினிக் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கிளினிக்குகள் மூலம் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்படும் சமயத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்ல இயலாதவர்கள் உடனடியாக இந்த அம்மா மினி கிளினிக்கை அணுகி தங்களுடைய நோயை குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஊரகப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், நகரப் பகுதிகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

மேலும், நீரிழிவு நோய், காய்ச்சல், தலைவலி என அதிகமாக பாதிக்கப்படக்கூடிய சிறிய நோய்களுக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும்.

தங்களது உடம்பில் என்ன நோய் இருக்கிறதென்று கூட தெரியாமல் இரவு, பகல் பாராமல் உழைக்கின்ற பாமர மக்கள் அம்மா மினி கிளினிக்கில் சிகிச்சை பெற வரும்போது, அவர்களுக்கு கடுமையான நோய்க்கான அறிகுறி ஏதேனும் தென்பட்டாலோ அல்லது அறுவை சிகிச்சை செய்து குணமடையச் செய்ய வேண்டிய நிலையிலிருந்தாலோ, மினி கிளினிக் மருத்துவரே, அவர்களை மேல் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களுக்கும், உழைக்கின்ற மக்களுக்கும் நல்ல சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x