

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சமபள்ளி வட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ளது வேருபள்ளி என அழைக்கப்படும் பேருஹள்ளி. இந்த ஊரில் பழமை வாய்ந்த கோவிந்தராஜ சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே பழமையான கல்வெட்டு ஒன்றை கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இதுபற்றி காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியது:
உள்ளூர் பிரமுகர்களின் வேண்டு கோளுக்கு இணங்க சமீபத்தில் இந்த கோயில் குறித்து ஆய்வு நடத்தினோம். அதில், கோயில் அருகே பழமையான இந்த கல் வெட்டை கண்டறிந்தோம். இந்த கல்வெட்டு சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி. 13-ம் நூற் றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த ஹொய்சாள மன்னன் வீர ராமநாதன் காலத்தைச் சேர்ந்தது.
அப்போது சிறப்புற்றிருந்த நானாதேசி(வெளிநாடு சென்று வணிகம் செய்யும் குழு) என்ற வணிகக் குழுவை சேர்ந்த ஒருவர் மன்னன் வீர ராமநாதனின் நலனுக்காக பெருமாள் கோயில் அமைத்துள்ளார். மேலும், அமுதுபடி, திருவிளக்கு உள்ளிட்ட நிபந்தனைகளுக்காக நிலத்தை தானம் அளித்த செய்தியை இந்த கல்வெட்டு விளக்குகிறது.
அந்த கோயிலில் அவர் நிறுவிய சிலைகள் தற்போது உடைந்த நிலையில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் உள்ளன. இந்த கோயில் தற்போதும் 40 ஊர்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருந்து வருகிறது. நானாதேசி என்ற வணிகக்குழுவை குறிப்பிடும் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த அளவில் தான் காணப்படுகிறது. அந்த வரிசையில் இந்த கல்வெட்டு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபற்றி தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.