உருமாற்ற கரோனா வைரஸ்: டிச. 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை

உருமாற்ற கரோனா வைரஸ்: டிச. 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை
Updated on
2 min read

புதிய அச்சுறுத்தலாக இங்கிலாந்தில் தோன்றியுள்ள உருமாற்ற கரோனா வைரஸ் குறித்து தமிழகத்தில் எடுக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய வரும் டிச.28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில் இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இந்திய முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வீட்டில் முடங்கினர் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஷாப்பிங் மால்கள் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியை கடந்தது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எட்டு லட்சத்தை கடந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டது. உலகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்தில் திடீரென உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் காரணமாக மீண்டும் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உருமாற்ற கரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இங்கிலாந்துடனான விமான சேவையையும் நிறுத்தியுள்ளது. ஆனாலும் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளை கணக்கெடுத்து பரிசோதனை செய்து தனிமை படுத்தும் முயற்சிகளை மத்தியா-மாநில அரசுகளின் சுகாதார துறைகள் எடுத்துவருகின்றன.

உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கான தடுப்பு நடவடிக்கை புதிதாக எதுவுமே இல்லை ஏற்கெனவே அரசு அறிவித்துள்ள முகக்கவசம் அணிவது சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்தலே போதும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சமீபகாலமாக பொதுமக்கள் இடையே முகக்கவசம் அணிவது, சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடடைபிடிப்பதில் கடுமையான அலட்சியம் இருந்து வருகிறது.

தற்போது உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த பயணிகளை கண்டறிந்து அவர்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறைச் செயலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு மார்ச் மாதம் 19 பேர் கொண்ட மருத்துவ-தொற்று நோய் நிபுணர் கொண்ட குழுவை நியமித்து அதன் ஆலோசனைப்படி நடந்து வருகிறது.

மாதம்தோறும் கடைசி வாரத்தில் இக்குழுவுடன் ஆலோசனை நடத்தி அது அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள், நீட்டிப்பு உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது. ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பிரதீப் கவுர் தலைமையில், உலக சுகாதாரத்துறையின் சௌமியா சாமிநாதன் ஆலோசனைப் பெற்று தமிழக அரசு கரோனா தொற்றை தடுக்கும் முயற்சியை எடுத்து கட்டுபடுத்தியது.

இந்நிலையில் தற்போது கரோனா உருமாற்ற கரோனாவாக மாறி வரும் சூழ்நிலையில் அதன் பாதிப்பை தடுக்க, எதிர்கொள்ள வரும் 28-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். வழக்கமான ஆலோசனையுடன் இதுகுறித்தும் மருத்துவ நிபுணர் குழு வழிகாட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in