

உலக மனநல நாளையொட்டி, திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள மானஸமித்ரா வித்யா பீடம் சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக சேவகர் மேதா பட்கர் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நமது இயற்கை, ஆரோக்கியம், நாகரிகத்தை மது சிதைத்து வருகிறது. மனநலன் பாதித்தவர்களுக்கு அன்பு மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால், அரசியல்வாதிகள்தான் மனநலன் பாதித்தவர்கள்போல செயல்படுகிறார்கள். மனிதர்கள் மீது, இயற்கை மீது அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமே. அரசு முடிவெடுத்தால் முடியாதது எதுவுமில்லை. மது தற்கொலைக்குத் தூண்டுவது மட்டுமின்றி, மனித வாழ்வின் முன்னேற்றப் பாதையில் பல தடைகளை ஏற்படுத்துகிறது. அவருக்கு வாக்களித்த பெண்களின் மனங்களின் இடம் பெறும் வகையில் முதல்வர் ஜெயலலிதா மதுவிலக்கை நிச்சயம் அமல்படுத்த வேண்டும் என்றார் மேதா பட்கர்.