கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (டிச. 23) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிகட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.

ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.

- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

- எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

- மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவுக்கேற்ப தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவுக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட் - 19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

- மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.

இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in