Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

வேளாண் சட்டங்கள் வந்த பிறகு கொள்முதல் அதிகரிப்பு- மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் சொல்வது என்ன?

நாராயணன் திருப்பதி

பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில், விவசாய சங்கங்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. அதற்காகவே மத்திய பாஜக அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்குப் பிறகே இந்த மூன்று சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கொடுத்திருந்த வாக்குறுதிகளைதான் மோடி அரசு சட்டமாக்கி உள்ளது. ஆனாலும் அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்னணியை நாம் ஆராய வேண்டும். வேளாண் துறை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்ததால், அதுபற்றி ஆராய்ந்து சீர்திருத்தங்களை பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்று 2003 ஆகஸ்ட் 15-ம் தேதி அன்றைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். அவரது ஆட்சி தொடராத நிலையில், அடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 2004 நவம்பர் 18-ம் தேதி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் குழு அமைத்தது. கடந்த 2006-ம் ஆண்டிலேயே அக்குழு அறிக்கை அளித்தும், 2014 வரை காங்கிரஸ் அரசு அதன் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை.

கடந்த 2014-ல் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்ததும் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாய கடன் அட்டை, மண்வள அட்டை, பயிர்க் காப்பீடு, பயிர்க் கடன், ஊரக வளர்ச்சி, சொட்டு நீர்ப்பாசன திட்டம் , விவசாய தொழிலாளிகளுக்கான ஓய்வூதியம் ஆகிய திட்டங்களை முழு வேகத்தோடு செயல்படுத்தியது. 9 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்க சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தவே, 'அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020’, 'விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020’, 'விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020’ ஆகிய 3 சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கம் அகற்றப்படும் என்பதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். குளிர்ப்பதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட விவசாய கட்டமைப்புகள் பெருகும்.

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தின்படி விளைபொருட்களை எந்த மாநிலத்துக்கும் எடுத்து சென்று விற்க முடியும். எந்த மாநிலமும் இனி விவசாய பொருட்களுக்கு வரியோ அல்லது கட்டணமோ வசூலிக்க முடியாது.

விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். விவசாயிகளின் நலன் கருதி மட்டுமே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இந்த சட்டத்தின்கீழ் விவசாய நிலங்கள் குறித்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது.

ஆனால், புதிய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எதுவும் இல்லை. எனவே, அது நீக்கப்படும் என்றும், ஒப்பந்த விவசாய முறையால் விவசாயிகளின் நிலங்கள் பறிபோகும் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் வதந்தியைப் பரப்பி வருகின்றன. இப்படி கூறிதான் விவசாயிகளைப் போராட்டத்துக்கு தூண்டி விடுகின்றனர். இந்நிலையில்தான் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், விவசாயிகளின் சந்தேகங்களுக்கும், எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் வதந்திகளுக்கும் விரிவான விளக்கம் அளித்துள்ளார். புதிய சட்டங்கள் வந்த பிறகு குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) அடிப்படையில் அரசு செய்துள்ள கொள்முதல் சாதனை அளவாக அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவை விட 1.5 மடங்கு எம்எஸ்பி விலையை அரசு உயர்த்தியுள்ளது என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எம்எஸ்பி முறையும், மண்டிகளும் தொடர்ந்து செயல்படும். பயிர்களுக்குதான் ஒப்பந்தமே தவிர, நிலத்துக்கு அல்ல. நிலத்தின் அனுபவ உரிமையை மாற்றித் தருதல், விற்பனை, குத்தகை, அடமானம் போன்ற எந்த விதமான ஒப்பந்தமும் புதிய சட்டங்களில் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் விவசாயிகளின் நிலம் பாதுகாப்புடன் இருக்கும். விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை வேளாண் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் விவசாயிக்கு பணம் தர வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். பல மாநிலங்களில் ஏற்கனவே ஒப்பந்த வேளாண்மைக்கு சட்டங்கள் உள்ளன என்று அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் குறித்து முறையாக விவாதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், 2000-ம் ஆண்டில் சங்கர்லால் குரு கமிட்டி, 2003-ல் மாதிரி ஏபிஎம்சி சட்டம், 2007-ல் ஏபிஎம்சி விதிமுறைகள் உருவாக்கம், 2010-ல் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்ட கமிட்டிகள், 2017 வேளாண் விளைபொருள் சந்தை சட்டம் என்று கடந்த 20 ஆண்டுகளாக வேளாண் சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளது. தனியார் சந்தைகளுக்கு வரி வசூலிக்க மாநிலங்கள் அனுமதிக்கப்படும், விவசாயிகளின் நிலத்தில் எந்த விதமான மாற்றத்தையும் நிறுவனங்கள் செய்ய முடியாது என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது கடிதத்தில் கூறியிருப்பது போல, வேளாண் சட்டங்களில் உள்ள உண்மைகளை உணர்ந்து தற்சார்பு இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

கட்டுரையாளர்

நாராயணன் திருப்பதி,

பாஜக செய்தித் தொடர்பாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x