

நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தும் ரூ.479 கோடியிலான கூட்டு குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.479 கோடிமதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகள், மங்களூர், நல்லூர், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியங்களில் 625 ஊரக குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 5.58 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சியில் ரூ.9.54கோடி குடிநீர் மேம்பாட்டு திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
திட்டங்கள் தொடக்கம்
நத்தம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரைக் கொண்டு ரூ.20.34 கோடியில் திண்டுக்கல் மாவட்டம்குஜிலியம்பாறை ஒன்றியத்தை சார்ந்த 53 ஊரக குடியிருப்புகளுக் கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தஞ்சை, கும்பகோணம் நகராட்சிக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.59.93 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் ரூ.2.98 கோடி, காங்கயம் நகராட்சியில் ரூ.2 கோடி, தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் ரூ.2.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சென்னை தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் ரூ.69.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடம், திருவல்லிக்கேணி மீர்சாகிப்பேட்டையில் உள்ள நகர்ப்புற சமூக சுகாதார மையத்துக்கு ரூ.67 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள முதல் தளம் என ரூ.89.22 கோடிமதிப்பிலான திட்டங்கள், கட்டிடங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை ஆணை பெற்ற 11 மாணவ, மாணவிகள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு மருத்துவருக்கான கோட், ஸ்டெதஸ்கோப் வழங்கி முதல்வர் வாழ்த்தினார்.
அமைச்சர்கள் வேலுமணி, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.