

கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளரான அப்துல் ஜப்பார் மறைவால், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
சாத்தான்குளம் வடக்கு பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் எஸ்.எம்.அப்துல் ஜப்பார் (82). கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளரான இவர் நேற்று காலை சென்னையில் காலமானார். தனது கணீர் குரலாலும், தெளிவான தமிழ் உச்சரிப்பாலும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர் அப்துல் ஜப்பார். இவரது தந்தை யூசுப்முகமது இலங்கையில் பணியாற்றினார். இதனால், அப்துல் ஜப்பார் பிறந்த உடனேயே இலங்கைக்கு சென்றுவிட்டார். வளர்ந்தது, படித்தது எல்லாம் அங்குதான்.
படித்து முடித்துவிட்டு மீண்டும் சாத்தான்குளம் வந்த அப்துல் ஜப்பார், அகில இந்திய வானொலியில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியில் சேர்ந்தார். 1980-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு - கேரளா அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியை முதன் முதலாக தமிழில் வர்ணனை செய்தார். முதல் வர்ணனையிலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
1982-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து போட்டியில், இவரது தமிழ் வர்ணனையை கேட்டு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் இவரை நேரில் அழைத்துப் பாராட்டினார். 1999,2004-ல் இங்கிலாந்தில் நடைபெற்றஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தமிழில் வர்ணனை செய்தார்.மேலும், இஎஸ்பிஎன், ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சிகளிலும் வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார்.
இவரது இலக்கிய நயம் மிக்க தமிழ் வர்ணனையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், 2002-ம்ஆண்டு இவரை இலங்கைக்கு நேரில் அழைத்து விருந்தளித்துப் பாராட்டினார். அந்த சந்திப்பு அனுபவத்தை ‘அழைத்தார் பிரபாகரன்’ எனும் பெயரில் நூலாகப் பதிவு செய்துள்ளார் அப்துல் ஜப்பார்.
இதுதவிர ‘இறை தூதர் முஹம்மது’, ‘காற்று வெளியினிலே’ உள்ளிட்ட மேலும் சில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், நாடக நடிகர், ஊடகவியலாளர் என பன்முகம் கொண்ட இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாடுகளில் குடும்பத்தோடு வசிக்கின்றனர். சென்னையில் உள்ள மகளுடன்தான் அப்துல் ஜப்பார் வசித்து வந்தார்.
அப்துல் ஜப்பாருடன் நெருங்கி பழகிய, சாத்தான்குளம் வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் மகா.பால்துரை கூறும்போது, ‘‘கிரிக்கெட் போட்டிகளை அப்துல் ஜப்பார் வர்ணனை செய்யும் அழகே தனி. தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வருவதற்கு முன்னால்வீடுகளை வானொலி ஆக்கிரமித் திருந்த காலத்தில் அவரது வர்ணனையை கேட்காத யாரும் இருக்க முடியாது. அவரது வர்ணனை, நம்மை அப்படியே மைதானத்துக்கு அழைத்துச் சென்று விடும்.
அவரது மறைவு சாத்தான்குளம் பகுதி மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. சாத்தான்குளம் பகுதி இளைஞர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு கிரிக்கெட் போட்டி நடத்தியபோது, அவர்களது அழைப்பை ஏற்று இங்கு வந்து ஒருநாள் முழுவதும் கிரிக்கெட் போட்டியை நேரடி வர்ணனை செய்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அமைப்பு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தினோம். சாதி, மதம், இனம் கடந்து அனைத்து மக்களும் இதில் கலந்து கொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அப்துல் ஜப்பா ருக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம். அப்துல் ஜப்பார் மறைந்தாலும் அவரது சாதனை மறையாது. இவ்வாறு அவர் கூறினார்.