

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினர்.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு 3-ம் கட்ட போராட்டமாக தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னையில் உள்ள 10 மண்டல அலுவலகங்கள் முன்புஇன்று போராட்டங்கள் நடைபெறும் என பாமக அறிவித்துள்ளது.
இந்நிலையில், உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் நேற்று மாலை 5.30 மணியளவில் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர்.
அங்கு, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், ராமதாஸை 2 அமைச்சர்கள் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“வன்னியர்களுக்கான 20 சதவீத தனி இடஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கை ஏமாற்றும் முயற்சி” என நேற்று முன்தினம் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.