

காங்கிரஸை தனித்துவிட்ட கட்சி தேர்தலில் பூஜ்ஜியம் ஆகிவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ராகுல் காந்தியின் 44-வது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 500 பேருக்கு வேட்டி, சேலைகள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டன.
கட்சியை பலப்படுத்த நடவடிக்கை
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசியதாவது:
ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அப்போது சத்தியமூர்த்தி பவனில் காமராஜர், சத்தியமூர்த்தி சிலைகள் நிறுவ ஏற்பாடு செய்துவருகிறோம். இதையொட்டி, திண்டுக்கல்லில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும். காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்தித்து, மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. கட்சியை பலப்படுத்த மாநில நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று வாக்குச்சாவடி முகவர் கமிட்டிகளை பலப்படுத்த உள்ளனர்.
இலங்கையின் வடக்குப் பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள், ஏற்கனவே விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். இப்போது, அவர்களை புத்த பிட்சுகள் தாக்குகிறார்கள். இலங்கையில் உள்ள இஸ்லாமியரை பாதுகாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஈராக்கில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவானபோதே, இந்திய அரசு முன்கூட்டியே செயல்பட்டு, அங்குள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இனியாவது, மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஞானதேசிகன் பேசினார்.
மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம்
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:
பாஜக ஆட்சியைவிட காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் காலம் விரைவில் வரும். மோடி எதிலும் தன்னைத்தான் முன்னிலைப்படுத்துகிறார். அவரது சாயம் விரைவில் வெளுக்கும். பாஜக ஆட்சியில் மீண்டும் அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்தியை எதிர்த்து போராட வேண்டிய காலம் விரைவில் வரும்.
காங்கிரஸ் ஆட்சியின்போது புகார்களில் சிக்கிய அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இப்போது பாலியல் புகாரில் சிக்கியவர்கூட மத்திய அமைச்சராக இருக்கிறார்.
தேர்தலில் எப்படிப்பட்ட தலைவர்களுக்கும் சறுக்கல்கள் ஏற்படுவது சகஜம். தேர்தலில் தோற்றதால் காங்கிரஸார் சோர்ந்துவிடவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பூஜ்ஜியம்தான், அதை ஒதுக்கி வைத்துவிட்டால் நாம் ஜெயித்து விடலாம் என்று நம்மை ஒதுக்கி வைத்தவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் பூஜ்ஜியம் ஆகிவிட்டனர். காங்கிரஸ் மீது பழிபோட்டு தப்பி விடலாம் என்ற கனவு கலைந்துவிட்டது. இப்போது அங்கிருந்த ஒரு ‘பூ’வும் போய்விட்டது.
எந்த மக்களால் நாம் புறக்கணிக்கப்பட்டோமோ, அந்த மக்களால் மகுடம் சூட்டப்படும் காலம் மீண்டும் வரும். எனவே, சிறு சிறு பிரச்சினைகளை மறந்து காங்கிரஸார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.