

அரசியல் மேதையின் கணிப்பை கவுரவப்படுத்துங்கள் என்று கனிமொழி எம்.பி.யின் கருத்துக்கு ஸ்ரீப்ரியா பதிலடி கொடுத்துள்ளார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக எம்.பி. கனிமொழி நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ரஜினி - கமல் அரசியல் செயல்பாடு குறித்த கேள்விக்கு கனிமொழி, "ரஜினி, கமலுக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க விரும்பவில்லை. இனிமேலும் ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இல்லை. திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.
இதற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் பதிலடி கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"சகோதரி..! தாங்கள் அரசியலில் என்னை விட மூத்தவர். இருப்பினும் சில உண்மைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. எம் தலைவர் நம்மவர் மற்றும் நண்பர் ரஜினியைப் பற்றிய விமர்சனம் அவர்கள் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் எனில், உங்கள் தந்தையார் என் பெரும் மரியாதைக்குரிய நம் தலைவர், மாறன், அமிர்தம், உதயநிதி, ஸ்டாலின், செல்வம் மற்றும் இன்று சன் பிக்சர்ஸ் (யார் பெயராவது விடுபட்டு இருந்தால் மன்னிக்கவும்) என அனைவரும் திரைத்துறையில் ஈடுபட்டவர்கள் என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லும் துரதிர்ஷ்டம் எனக்கு. இல்லை அவர்கள் வயதைக் குறித்து உங்கள் கருத்து என்றால் அதற்கு மேல் குறிப்பிட்டுள்ள பெயர்கள் சாலப்பொருந்தும்.
மக்களுக்கு மாற்றம் தேவை. நல்ல ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று வருபவர்களை வரவேற்றுப் போட்டியிடுங்கள். மூத்த தலைவராகப் பல தலைமுறை அரசியலைக் கண்டு வென்ற உங்கள் தந்தையார் விரும்பி அரசியலுக்கு அழைக்கப்பட்டவர் நம்மவர். அந்த அரசியல் மேதையின் கணிப்பை கௌரவப்படுத்துங்கள் தங்கையாரே...!"
இவ்வாறு ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.