

புதுச்சேரி கடற்கரையில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து புத்தாண்டை கொண்டாடலாம், அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது என்று, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடற்கரையிலும், உணவகங்களிலும் கரோனா சூழலை சுட்டிக்காட்டி விழாக்கள் நடத்தக்கூடாது என்று, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் மாநில பேரிடர் மீட்புத்துறை கூட்டம் இன்று (டிச. 22) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்தார். அக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் ஆட்சியர் பிறப்பித்துள்ள புது உத்தரவில், விழாக்கள் நடத்தக்கூடாது, உணவகங்களில் கேளிக்கை நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார். அது பொதுவானத் தீர்ப்பு. இதற்கும் கரோனாவுக்கும் தொடர்பில்லை. மக்கள் கூடும் இடத்தில் விதிமுறைகள் பற்றி தெளிவாக உள்ளது.
இந்துக்கள் நம்பிக்கையான சனிப்பெயர்ச்சிக்கு காரைக்காலுக்கு பல மாநிலங்களில் இருந்து மக்கள் வருவார்கள். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு விதிமுறைகளை கடைப்பிடித்து, முன்பதிவு செய்து வரலாம். சுவாமி தரிசனத்துக்கு வரிசையாக பக்தர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தோம். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வருகிறது. சனிப்பெயர்ச்சியை விதிமுறைகளை கடைப்பிடித்து நடத்துவோம் என்று அரசு தரப்பில் வாதிடுவோம்.
அதேபோல், கிறிஸ்துமஸ் விழாக்கள் வழக்கம்போல் நடைபெறும். தேவாலயம் சென்று வழிபட தடையில்லை. பொங்கல் விழாக்களையும் மக்கள் கொண்டாடலாம்.
புத்தாண்டில் உணவகங்களில் விதிமுறைகளை கடைப்பிடித்து 200 பேருக்குள் இருந்து தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து பங்கேற்கலாம். அதேபோல், புதுச்சேரி கடற்கரையில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து புத்தாண்டை கொண்டாடலாம். அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. தடை விதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஏனாமில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எம்எல்ஏ-வாக 25 ஆண்டுகள் பணியாற்றி வருவதற்கு வரும் ஜனவரி 6-ல் அரசு சார்பில் விழா நடக்கும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்போம். பொங்கல் பரிசு தொடர்பான கோப்பு தயாரிக்கப்படவுள்ளது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.