

"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிட முடியாது. யார் எந்தத் திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தக் கூடிய ஒரே கட்சி திமுக மட்டும்தான்" என நெல்லையில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக எம்.பி. கனிமொழி நெல்லை மாவட்டத்திற்கு வந்தார். அவருக்கு கரகாட்டம் நையாண்டி மேளம் இசைக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு அண்ணா சிலை மற்றும் டவுன் வஉசி மணிமண்டபத்தில் உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கினார்.
பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி இத்திட்டத்தின் கீழ் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுப் பணிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையம் கட்டுவதாகச் சொல்லி மணல் திருட்டு நடந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு அரசுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. எத்தனை வழக்குப் பதிவு செய்தாலும் அதனை சந்திக்கத் தயராக இருக்கிறோம்.
கரோனா காலகட்டத்தில் மக்களுக்காக 5000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். ஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்" என்றார்.
நடிகர் கமலஹாசன் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இல்லத்தரசிகளுக்கான சம்பளம் குறித்து கேட்டதற்கு கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி யார் எந்தத் திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை செயல்படுத்தும் ஒரே கட்சி திமுக மட்டும்தான் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனா காலகட்டத்திலும் காணொலிக் காட்சி மூலம் அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறார் ஸ்டாலின். மக்கள் பணிகள் செய்வது தான் தலையாயக் கடமை. அதனை ஸ்டாலின் செய்து வருகிறார். தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
ஜனவரியில் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி நிறைவு பெறும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். இனிமேயும் மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.