

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து திமுக அளித்துள்ள மனுவை படித்துப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக, ஆளுநர் கூறியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (டிச. 22) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"முதல்வர் பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றிருக்கும் ஊழல், மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியை வெளிச்சந்தையில் விற்றதில் நடைபெற்ற ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் ஆகிய ஊழல்களை ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம்.
அதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத காரணத்தால், புகாருக்குரிய ஆதாரங்களை ஒன்றுதிரட்டி ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
முதல்வர் பழனிசாமி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளார். அதற்குரிய ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்.
முதல்வர், துணை முதல்வர் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க 2018-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆளுநர் உத்தரவிட முடியும். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும். விசாரணை நடத்துவதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும்.
இன்னும் பல அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை திமுக வழக்கறிஞர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அவை கிடைத்த பிறகு அடுத்தகட்ட புகார்களை அளிப்போம்.
புகார் மனுவை படித்து பார்த்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியிருக்கிறார். நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. இந்த ஊழல் புகார்களை மக்கள் மன்றத்திற்கு நிச்சயம் எடுத்துச் செல்வோம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.