

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் பிறந்த நாளை தமிழக அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
3 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்ஜிஆர் மறைந்ததும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றவர் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை அவருக்கு உண்டு. நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றும் ஜானகி அம்மாளின் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
பிளவுபட்ட அதிமுக இணைய ஒப்புக் கொண்டவர் ஜானகி அம்மாள். அதன் மூலம் இரட்டை இலை சின்னம் கிடைக்கவும், அதிமுக மறுபிறவி எடுக்கவும் காரணமாக இருந்தவர். அதிமுக தலைமை அலுவலகத்துக்காக தனது பெயரில் இருந்த இடத்தை தானமாகக் கொடுத்தவர். எனவே, அவரது பிறந்த நாளை தமிழக அரசு சார்பில் கொண்டாட முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.