காஞ்சியில் அறநிலையத் துறையின் புதிய மண்டல அலுவலகம்: உள்ளூர் மக்கள், கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி

காஞ்சியில் அறநிலையத் துறையின் புதிய மண்டல அலுவலகம்: உள்ளூர் மக்கள், கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள புராதன கோயில்கள் உள்ளிட்ட கோயில்களின் சொத்துகளை பராமரிக்கும் பணிகளை அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம், சென்னை, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 11 மண்டலங்களையும் மாவட்ட அளவில் 28 கோட்டங்களையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலத்துக்கு ஓர் இணைஆணையர், ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஓர் உதவி ஆணையரை நியமித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோயில்களின் நிர்வாக பணிகள் வேலூர் மண்டலத்தின் கீழ் மேற்கொள்ளபட்டு வந்தன. இதனால், மேற்கண்ட 3 மாவட்டங்களில் உள்ள 3,200 கோயில்களின் சொத்துகள் பராமரிப்பு, நீதிமன்ற வழக்குகள், கும்பாபிஷேக பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல்களை பெறுவதற்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள வேலூர் மண்டல இணை ஆணையர் அலுவலகத்து சென்று வர வேண்டிய நிலை இருந்ததால் கோயில் பணிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டன.

திருப்பணிக்கு விரைவாக ஒப்புதல்

இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை பிரித்து செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன்மூலம், வேலூர் மண்டலத்தின் கீழ் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டது. இதனால், காஞ்சிபுரத்தில் புராதன கோயில்களின் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக, காஞ்சியில் மண்டல அலுவலகம் அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, ‘இந்து தமிழ்' நாளிதழில் கடந்த பிப்ரவரி மாதம் செய்தி வெளியிடப்பட்டது. இதன்பேரில், அறநிலையத் துறை நிர்வாகம் காஞ்சிபுரத்தை புதிய மண்டலமாக அறிவித்து, இணை ஆணையரை நியமித்துள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களை இணைத்து புதிய மண்டலமாக காஞ்சிபுரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல இணை ஆணையர் அலுவலகம் ஏகேடி தெருவில் வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ளது. மேலும், இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட 17 புதிய பணியிடங்களுக்கு அதிகாரிகள், பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். பொறியாளர் பிரிவின் மூலம், கோயில்களின் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து ஒப்புதல் பெற முடியும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in