சென்னையில் பயணிகளின் தேவை கருதி புறநகர் மின்சார ரயில்களின் தினசரி சேவை 410 ஆக அதிகரிப்பு

சென்னையில் பயணிகளின் தேவை கருதி புறநகர் மின்சார ரயில்களின் தினசரி சேவை 410 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னையில் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்கான புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் சேவை 410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் சென்னை, புறநகர் பகுதிகளில் வழக்கமான மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும், ரயில்வே ஊழியர்கள், வங்கி, காப்பீடு, பொதுத் துறைநிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி தடங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் பயணம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகார கடிதம், அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட் வாங்கி பயணம் செய்கின்றனர். பெண்கள் நேரக் கட்டுபாடு இன்றி பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் மின்சார ரயில்களின் சேவை நேற்று முதல் 410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கு தளர்வால் 90 சதவீத நிறுவனங்கள், அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

சென்னை, புறநகரில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதியில் மின்சார ரயில்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. எனவே, பயணிகளின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, மின்சார சிறப்பு ரயில்கள் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அலட்சியம் காட்டாமல் கட்டாயம் முகக் கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு அறிவுறுத்துகிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in