சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு பாசன நீர் திறப்பதில் தொடரும் சிக்கல்: விவசாயிகள் கொதிப்பு

சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு பாசன நீர் திறப்பதில் தொடரும் சிக்கல்: விவசாயிகள் கொதிப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு பாசனநீர் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் விவசாயிகள் கொதிப்படைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

அதேபோல் பெரியாறு விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.

இதைக்கண்டித்து விவசாயிகள் பல கட்ட போராட்டம் நடத்தியும் முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி சிலதினங்களுக்கு முன்பு ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர், நிர்வாகி முத்துராமலிங்கம் தலைமையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியை சந்தித்தனர்.

அப்போது ‘ சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு நீர் திறக்க தேவையில்லை. தண்ணீர் திறப்பதற்கு எந்த அரசு உத்தரவும் இல்லை என மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஆட்சியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான ஆவணங்களுடன் மீண்டும் ஆட்சியரை சந்திக்க சென்ற விவசாயிகளை ஆட்சியர் சந்திக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் கூறியதாவது: ஆண்டுதோறும் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பிலே உள்ளது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்க தேவையில்லை என கூறுவதாக ஆட்சியர் கூறுகிறார்.

பல கட்ட பேச்சுவார்த்தையில் கூட மேலூர் பகுதிக்கு திறக்கும்போதே சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அதற்கான ஆவணங்களுடன் ஆட்சியரை சந்திக்க சென்றால், எங்களை சந்திக்க மறுக்கிறார். இதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மேலப்பூங்குடியில் கூடி விவாதிக்க திட்டமிட்டுள்ளோம், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in