ஸ்டாலின் முன்னிலையில் கோவை அதிமுக முன்னாள் மேயர் திமுகவில் இணைந்தார்; சுயநலத்துக்காகச் சென்றதாக அதிமுக குற்றச்சாட்டு

ஸ்டாலின் முன்னிலையில் கோவை அதிமுக முன்னாள் மேயர் திமுகவில் இணைந்தார்; சுயநலத்துக்காகச் சென்றதாக அதிமுக குற்றச்சாட்டு

Published on

கோவை மாநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாளா் மேயர் கணபதி ப.ராஜ்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இன்று (21-ம் தேதி) இணைந்தார். சுயநலத்துக்காக அவர் சென்றதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்தவர் கணபதி ப.ராஜ்குமார். 25 ஆண்டுகளாக அதிமுக உறுப்பினராக இருந்து வந்த இவர், கடந்த 2011 முதல் 2014 வரை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவராகவும், 2014 முதல் 2016 வரை, கோவை மாநகராட்சி மேயராகம் பதவி வகித்துள்ளார். மேயராகப் பணியாற்றிய காலகட்டத்தில், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இன்று (21-ம் தேதி) இணைந்தார். இது அதிமுகவினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புறக்கணிப்பு

திமுகவில் இணைந்தது குறித்து கணபதி ப.ராஜ்குமார் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, நான் கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக இருந்துள்ளேன். என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்குப் பல்வேறு சேவைகளைச் செய்துள்ளேன். அதிமுக மக்கள் பணி, மக்கள் சேவை என்ற பாதையில் இருந்து விலகி விட்டது. தற்போதைய சூழலில், திமுக மட்டும்தான் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. மக்களுக்கு எதிரான பிரச்சினைகளைக் களைய முன்னின்று குரல் கொடுத்து வருகிறது. கட்சிக்காகப் பாடுபட்ட எங்களைப் போன்ற முக்கியப் பொறுப்புகளில் இருந்த, முன்னாள் நிர்வாகிகளைப் புறக்கணிக்கும் வேலை அதிமுகவில் நடந்து வருகிறது.

கட்சிக்குத் தொடர்பே இல்லாதவர்களுக்குப் பதவி அளித்துள்ளனர். எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு எதுவும் வழங்காமல் அதிமுகவில் புறக்கணிக்கின்றனர். நாங்கள் மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால், இதுபோன்ற மாற்றம் வந்துதான் தீர வேண்டும். திமுகவினர் என்னை அழைத்துப் பேசினர். இங்கு நீங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் மக்கள் பணியாற்றலாம் என உறுதியளித்தனர். இதையடுத்து நான் திமுகவில் இணைந்துள்ளேன். திமுகவில் இணையும்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'நீங்க வாங்க சிறப்பாகச் செயல்படலாம். உங்களுக்கு உரிய மரியாதை இங்கு தரப்படும்' என என்னிடம் கூறினார்'' என்று கணபதி ப.ராஜ்குமார் தெரிவித்தார்.

கட்சிக்குப் பாதிப்பில்லை

இதுதொடர்பாக, அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, ''ஒரு சிலர் தனிப்பட்ட, சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவும், கட்சிக்கு உழைக்காமலும் பதவியை எதிர்பார்க்கின்றனர். பதவி கிடைக்காவிட்டால், சுயநலத்துக்காக வேறு கட்சிக்குச் செல்கின்றனர். நிரந்தரமாகக் கொள்கை, லட்சியத்தோடு, என்ன வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தன்னுடைய இயக்கத்துக்காக வாழ வேண்டும் என்ற நல்ல பண்பாடு தற்போது இல்லை.

கணபதி ப. ராஜ்குமார் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றியிருக்கலாம். தற்போது அவர் திமுகவுக்குச் சென்று இருப்பது, அவருடைய சுயநலத்தைக் காட்டுகிறது. ராஜ்குமார் அதிமுகவில் இருந்து வெளியேறியதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு அதிமுக தொண்டர்கூட அவரோடு செல்ல மாட்டார். ராஜ்குமாருடன், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள்கூட அதிமுகவை விட்டு விலக மாட்டார்கள். கட்சிப் பணியை முறையாகச் செய்யாத காரணத்தால், கணபதி ப.ராஜ்குமார் அவராகவே கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in