

தடாகம் பகுதியில் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாகப் பெறப்பட்ட புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளருக்கு வேளாண்துறை இணைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கோவை சின்ன தடாகத்தைச் சேர்ந்த எஸ்.கணேஷ், போக்குவரத்து ஆணையருக்குக் கடந்த அக்டோபர் 22-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், "கோவையில் உள்ள சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், எண்.24 வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய கிராமங்களில் விவசாய டிராக்டர்களைப் பயன்படுத்தியும், வாகன நம்பர் பிளேட், தகுதிச் சான்று இல்லாத வாகனங்களைப் பயன்படுத்தியும் சட்டவிரோதமாக மணல் கடத்தி வருகின்றனர். இந்தச் சட்டவிரோதக் கடத்தலுக்குச் சுமார் 150 டிராக்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மணல் எடுத்துச் செல்லும் லாரி, டிராக்டர்களை இயக்கும் பல ஓட்டுநர்களுக்கு முறையாக ஓட்டுநர் உரிமம் இல்லை. இவர்கள் அதிக வேகமாக வாகனங்களை இயக்குவதாலும், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்துவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. மணலை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் சாலை முழுவதும் தூசி படிவதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இவையனைத்தும் அறிந்த காவல்துறை அதிகாரிகள், சில நேரங்களில் வாகனத்தைப் பறிமுதல் செய்து விட்டுவிடுகின்றனர். எனவே, இதுபோன்று தவறாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் டிராக்டர்களுக்குத் தடை விதிப்பதோடு, அதிக அபராதம் விதிக்க வேண்டும்" எனக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு வேளாண் துறை இணைச் செயலர் எஸ்.கலைச்செல்வன், வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிராக்டர்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.