

2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையப் பொதுச் செயலாளர் தலைமையிலான குழு இன்று சென்னை வந்தது. 2 நாட்கள் தங்கியிருக்கும் குழு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அரசு செயலர்கள், காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் 4 மாதங்களே உள்ளதால், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையப் பொதுச் செயலாளர் தலைமையிலான குழு இன்று சென்னை வந்தது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா, தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிஹார் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீ வத்ஸவா ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு 2 நாட்கள் ஆலோசனை நடத்தும். இக்குழுவினர் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். காலையில் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுக குழுவும், அடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக குழுவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் ஒரு குழுவும் சந்தித்து ஆலோசனை நடத்தின.
தொடர்ந்து அரசியல் கட்சிகள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்டத் தேர்தல் அலுவலர்களான ஆட்சியர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், வருமான வரித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
நாளை (டிச.22) பல்வேறு பாதுகாப்பு சார்ந்த துறை அதிகாரிகளுடன் சந்திப்பு, தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் பிற துறை அரசு செயலாளர்களுடன் சந்திப்பு நடைபெறும்.
நாளை பிற்பகல் 1 மணிக்கு கிண்டியின் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புடன் நிறைவடையும். அதன்பிறகு, சட்டப்பேரவை 2021-க்கான பொதுத் தேர்தல்களுக்கான ஆயத்தத்தை மதிப்பிடுவதற்காக புதுச்சேரிக்கு அந்தக் குழு புறப்படும்.