

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்துக் காரைக்காலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மமகவினர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்தும் அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் காரைக்காலில் இன்று (டிச.21) ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
மமக காரைக்கால் மாவட்டத் தலைவர் அ.ராஜா முகமது தலைமையில், விவசாய அணி மாவட்டச் செயலாளர் டேவிட், தமுமுக மாநிலச் செயலாளர் அப்துல் ரஹிம், மருத்துவச் சேவை அணி மாநிலத் துணைச் செயலாளர் பயாஸ், மமக மாவட்டச் செயலாளர் முகமது ஆசிக் மற்றும் நிர்வாகிகள், காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர், இன்று மாலை காரைக்கால் ரயில் நிலையம் முன்பு கூடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ரயில் நிலையத்துக்குள் சென்று எர்ணாகுளம் விரைவு ரயிலை மறிக்க முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.