அரசுப் பள்ளி மாணவர்களுடன் புதுவை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர் காங்கிரஸார்: போலீஸ் வேனை மறித்ததால் தடியடி

அரசுப் பள்ளி மாணவர்களுடன் புதுவை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர் காங்கிரஸார்: போலீஸ் வேனை மறித்ததால் தடியடி
Updated on
1 min read

அரசுப் பள்ளி மாணவர்களுடன் மாணவர் காங்கிரஸார் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை திடீரென்று இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. புதுவையிலும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான கோப்பு ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், இந்தக் கோப்பை மத்திய அரசுக்கு அவர் அனுப்பி வைத்தார். இதனால் இன்று வரை இந்தக் கோப்பிற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனிடையே மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்குவதாக புதுவை ஆளுநரைக் கண்டித்து சனிக்கிழமை முதல் மாணவர் காங்கிரஸார் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். அண்ணா சாலை முன்பு அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று (டிச.21) மதியம் மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் அரசுப் பள்ளியில் படிக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பாரதியார் சிலை பகுதிக்கு வந்தனர்.

மாணவர்களின் போராட்டம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரியாததால், அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸாரால் மாணவர்களைத் தடுக்க முடியவில்லை. தடுப்புகளைத் தள்ளிவிட்டு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆளுநர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்து ஆளுநருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

தடுப்புகளுக்கு வெளியே நின்ற மாணவர்கள் போலீஸாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஆளுநரைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். மாணவர்களை வழிநடத்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகளை போலீஸ் வேனில் ஏற்றிக் கைது செய்தனர்.

இதனையடுத்து ஒருதரப்பு மாணவர்கள் அந்த ஜீப்பைச் சுற்றி வளைத்தனர். இதனால் ஜீப்பை எடுக்க முடியவில்லை. இதனால் போலீஸார் மாணவர்களைத் தடியடி நடத்தி விரட்டினர். ஆளுநர் மாளிகை முன்பு இருந்த மாணவர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். மாணவர் காங்கிரஸார் 5 பேரைக் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in