Published : 21 Dec 2020 05:22 PM
Last Updated : 21 Dec 2020 05:22 PM

வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி தொடக்கம்: தினமும் 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை

வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி வைத்தார். மேலும், மின் உற்பத்தி ஆலையில் இருந்து தினமும் 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள அம்முண்டியில் வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை செயல்படுகிறது. இங்கு, 2020-21 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணிகள் இன்று (டிச.21) தொடங்கின. மாதத்துக்கு 60 ஆயிரம் டன் கரும்பு வீதம் 3 மாதங்களுக்கு ரூ.2.25 லட்சம் டன் அளவுக்கு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு அரவைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முகமது ஜான், சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் தேவகி, கூட்டுறவுச் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் சங்கர், கூட்டுறவுச் சர்க்கரை ஆலைத் தலைவர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் பங்கேற்றனர்.

கரும்பு அரவைப் பணி தொடங்கியது குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு உற்பத்தி செய்யப்படும் சாகுபடிப் பரப்பளவு 2 ஆயிரத்து 89 ஹெக்டேராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1,099 ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கரும்பு அரவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போளூர் தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பு மற்றும் ஆம்பூர், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து கூடுதலாகக் கரும்பு இறக்குமதி செய்யப்படும். இதன்மூலம் மொத்தம் 2.25 லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பரிந்துரை நிலை நிலுவைத் தொகை ரூ.102 கோடியாக தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தார்.

10 மெகாவாட் மின் உற்பத்தி

வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மின் உற்பத்தித் திட்டமும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இங்குள்ள மின் உற்பத்தி ஆலை தினமும் 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. நடப்பாண்டில் தினமும் 10 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைத் தலைவர் ஆனந்தன் கூறும்போது, ''வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் 10 மெகாவாட் மின்சாரத்தில் 3 மெகாவாட் மின்சாரம் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீதமுள்ள 7 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்பனை செய்யப்படும். கடந்த 4 ஆண்டுகளில் வேலூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடியே 86 யூனிட் அளவுக்கான மின்சாரம் விற்பனை செய்யப்பட்டு ரூ.19 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x