

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (21-ம் தேதி) கோவைக்குக் கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தேர்தல் ஆணையத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வழக்கமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், கூடுதல் எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து அந்தந்த மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து, பாதுகாப்பாகக் கொண்டுவரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவைக்கு, மகாராஷ்டிர மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுவரும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (21-ம் தேதி) கோவைக்குக் கொண்டு வரப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் இந்த இயந்திரங்கள் ரேஸ்கோர்ஸில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் கு.ராசாமணி இன்று (21-ம் தேதி) செய்தியாளர்களிடம் கூறும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தேவையான வாக்கு இயந்திரங்கள் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 3,048 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. இதற்காக 4,267 பேலட் இயந்திரங்கள், 4,267 கன்ட்ரோல் இயந்திரங்கள், 4,500 வி.வி.பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட இருக்கின்றன.
கோவையில் ஏற்கெனவே 753 பேலட் இயந்திரங்கள், 205 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 81 வி.வி.பேட் இயந்திரங்கள் இருக்கின்றன. இயந்திரங்கள் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர், சஹாரா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று 3,410 கன்ட்ரோல் யூனிட், 4,330 வி.வி.பேட் யூனிட் இயந்திரங்கள் கோலாப்பூரில் இருந்து வந்துள்ளன.
கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன. 23-ம் தேதி முதல் பெங்களூருவில் இருந்து வரும் பெல் நிறுவன ஊழியர்கள், அவற்றைச் சோதனை செய்ய இருக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெறும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. வாக்குப் பெட்டிகள் வைப்பதற்காகவே கட்டப்பட்ட புதிய கட்டிடம், தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று ஜனவரி மாதம் திறக்கப்படும்" என்று ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.