

வரத்து குறைவால் மதுரை மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.2 ஆயிரத்தை தொட்டது.
கரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். வீட்டு விஷேசங்கள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடக்காததால் பூக்கள் வாங்க ஆளில்லை. கோயில்களும் மூடப்பட்டதால் பூக்கள் தேவை முற்றிலும் இல்லாமல் இருந்தது.
அதனால், விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடிகளிலே விட்டனர். வருமானம் இல்லாமல் செடிகளையும் அவர்கள் சரியாக பராமரிக்கவில்லை. அதனால், தற்போது சந்தைகளுக்கு பூக்கள் வரத்து மிக குறைவாக உள்ளது.
தென் தமிழகத்தில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் போன்றவை முக்கியமானது. தற்போது இந்த சந்தைகளுக்கு மல்லிகை பூக்கள் வரத்து குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில் கூட அதிகமாக இருக்கிறது.
மாட்டுத்தாவணி பூமார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்றது. முல்லைப்பூ ரூ.700, கோழிக்கொண்டை ரூ.70, சம்பங்கி ரூ.120, செவ்வந்தி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.150, அரளி ரூ.300 வரை விற்றது.
இதுகுறித்து மாட்டுதாவணி பூ மார்க்கெட் பூ வியாபாரிகள் கூறுகையில், ‘‘பூக்கள் வரத்து குறைவாக உள்ளதாலேயே அனைத்து வகை பூக்கள் விலை தற்போது உயர்ந்து வருகிறது. அதில் மல்லிகைப்பூ வரத்து மொத்தமாக சரிந்ததால் சாதாரண நாட்களிலே விழாக்காலம்போல் அதன் விலை கூடியுள்ளது, ’’ என்றனர்.