

தமிழகத்தில் 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டில் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி டிச.19ஆம் தேதி அறிவித்தார். இதுதவிர பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் துண்டுக் கரும்புக்குப் பதில் முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையின்படி, 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுடன், முகாம்களில் வசிக்கும் 18,923 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் சேர்த்து பொங்கல் பரிசை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்,3.75,275 சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பித்ததில் 1,86,137 கோரிக்கைகள் பெறப்பட்டன. 1,64,083 விண்ணப்பங்கள் அரிசி அட்டையாக வகை மாற்றம் செய்யப்பட்டது. 20.12.2020 கால அவகாசம் உள்ள நிலையில், மீதமுள்ள கோரிக்கைகளின்படி அரிசி அட்டையாக வகை மாற்றம் செய்யும்போது அந்த அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டிய நிலையில், நிகர செலவினத் தொகை ரூ.5604.84 (ரூ.5504.77+100.07) கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ரூ.1000 மற்றும் பரிசுத் தொகுப்புக்காக ரூ.2,363 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், புதிய அறிவிப்புக்காக ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி 4ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க அந்தந்தத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.