

ரஜினியுடன் கூட்டணி அமைத்தால், முதல்வர் பதவியை அவர் எனக்கு அளித்தால் ஏற்பதில் தயக்கம் இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் செய்தியாளர்கள் கேள்விக்கு அளித்த பதில்கள்:
உங்கள் திட்டங்களுக்கெல்லாம் சாத்தியம் இருக்கிறதா? அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஊதியம் கொடுக்க முடியுமா?
கண்டிப்பாக முடியும். நான் அடிக்கடி சொல்வது இப்போதுள்ள ஊழல்களைத் தவிர்த்தால் தமிழகத்தை சுபிட்சமாக வைத்திருக்க முடியும்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ நாவடக்கம் பற்றிச் சொல்கிறாரே?
அவர் நாவடக்கம் பற்றிப் பேசலாம். எங்கள் நாவடக்கம் பற்றி அவர் பேச வேண்டிய அவசியமில்லை.
சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாவலன் என இரண்டு கட்சிகளும் சொல்கிறன்றனவே?
சிறுபான்மை மக்களின் பிரச்சினை அனைவரின் சித்தனையாக இருக்கவேண்டும். அதை இரு கட்சிகள் கொண்டாட முடியாது.
'மிஷன் 200' பற்றி திமுக தலைவர் சொல்கிறாரே?
அவர், தன் கட்சிக்காரர்களுக்கு பூடகமாகச் சொல்கிறார். அவர் 200 என்று சொல்வது உடன் இருப்பவர்களுக்கு சொல்லும் சேதி. உங்களுக்கு 200 ரூபாய் தருவேன் என்று சொல்கிறார். இது ஊகம்தான்.
அதிமுக, திமுகவுடன் கூட்டணி கண்டிப்பாக கிடையாது என்று சொல்வீர்களா?
சொல்லலாமே.
ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை என்று சொல்லிவிட்டார். கூட்டணி சேர்ந்தால் அவருக்குப் பதில் உங்களை முதல்வராக இருக்கச் சொன்னால் ஏற்பீர்களா?
மறுப்பதற்கு என்ன இருக்கிறது இதில். நாங்கள் எங்களுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நீங்கள் பேசி முடிவு செய்தால் எப்படி?
‘பி’ டீம் இல்லை என்கிறீர்கள். பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?
இல்லை. எங்களை ‘பி’ டீம் என்று சொல்வது அவமானப்படுத்தும் நிலையில் உள்ளது. கூட்டணி பற்றிச் சொல்வீர்களா என்று இப்போதே நிர்பந்திக்க முடியாது. ஜனவரி மாதத்தில் கூட்டணி குறித்துச் சொல்வேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பதிலளித்தார்.