Published : 21 Dec 2020 01:07 PM
Last Updated : 21 Dec 2020 01:07 PM

ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் அவகாசம்

சென்னை

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்த தமிழக அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்கக் கோரிய அவகாசத்தை உயர் நீதிமன்றம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்த தமிழக அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் புதிதாக வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது கேம்ஸ்கிராப்ட் தரப்பில், “வெளியில் சென்று ரம்மி விளையாடுவதைவிட ஆன்லைனில் விளையாடுவது பாதுகாப்பானதுதான். ரம்மி என்பது விளையாட்டு மட்டுமல்ல, திறமையை வளர்க்கக்கூடியது.

கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது தொடர்பாக குதிரைப் பந்தய வழக்குகளில் முன்னுதாரணங்கள் உள்ளதால் வழக்கு முடியும்வரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், ''ஏற்கெனவே தொடர்ந்த வழக்குகளில் பதிலளிக்கவும், இறுதி வாதங்களை வைப்பதற்கும் மேலும் அவகாசம் வேண்டும். குதிரைப் பந்தயத்தையும், ரம்மியையும் ஒன்றாகக் கருத முடியாது. பெற்றோரின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பிள்ளைகள் ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார்கள்.

அவசரச் சட்டத்துக்குப் பதிலாக ஜனவரி முதல் வாரத்தில் சட்டம் இயற்றப்படும் என்பதால் அதன்பின்னர் பதிலளித்து, இறுதி வாதங்களை முன்வைக்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வதையும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாகக் கருதமுடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அவசரச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, இறுதி விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x