Published : 21 Dec 2020 12:49 PM
Last Updated : 21 Dec 2020 12:49 PM

இல்லத்தரசிகளுக்கு ஊதியம், மின்னணு வீடுகள்: மக்கள் நீதி மய்யத்தின் ஏழு அம்சத் திட்டங்கள்: கமல் வெளியிட்டார்

சென்னை

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றுவது உள்ளிட்ட 7 அம்சத் திட்டங்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசியதாவது:

“அண்ணா பிறந்த ஊரில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறோம். நாங்கள் வைத்திருக்கும் திட்டங்களின் முக்கிய அம்சமாக, தமிழகத்தைச் சீரமைப்போம் என்கிற திட்டத்தில் 7 அம்சத் திட்டங்கள் உள்ளன. அதைப் பல நாள் ஆராய்ந்து அனுபவம் மிக்கவர்களை வைத்துத் தயாரித்துள்ளோம். அனுபவம் வாய்ந்தவர்கள் என்று சொல்லக்காரணம் என் பக்கத்தில் அமர்ந்துள்ள சந்தோஷ்பாபு அப்படிப்பட்ட அனுபவஸ்தர்தான்.

தமிழகத்தின் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசு கெடுபிடிகள், ஊழல் ஆகியவற்றைச் சகிக்காமல் தனது பணிக்காலம் 8 ஆண்டுகள் இன்னும் இருந்த நிலையில், அதை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். தமிழகத்தைச் சீரமைப்போம் என்பதில் முக்கியமான ஒரு விஷயம் மக்களுக்குச் சென்றடையும் அரசு சேவை எல்லாம் அவர்களுக்குச் செய்யும் தானமாக இல்லாமல் மக்களைச் சென்றடையும் சேவையாக இருக்க வேண்டும்.

துரித நிர்வாகத் திட்டம், சேவை உரிமைச் சட்டம், அரசு சேவை மக்களின் உரிமை என்பதை அவர்கள் உணரவேண்டும். அப்படி உணர்ந்தால் அரசு அலுவலகத்தில் கியூ கட்டி நிற்க வேண்டியதில்லை. எப்படி வாக்களிக்கும் நேரத்தில் தேடிப்போகிறதோ, அரசு அதேபோல் எங்கள் அரசு சேவைகளை அவர்களைத் தேடிச் சென்று கொடுக்கும்.

அதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அத்தனை இல்லங்களும் மின்னணு இல்லங்களாக மாற்றப்படும். அது கூரையாக இருந்தாலும், குடிசையாக இருந்தாலும், கான்கிரிட் வீடுகளாக மின்னணு இல்லமாக மாற்றப்படும். அதிக செலவல்லவா? என்று கேட்கலாம். மக்களுக்காகச் செய்யாமல் அந்தப் பெருஞ்செலவை வேறு எங்கு செய்வது?

நவீன தற்சார்பு கிராமங்கள், நகரங்களில் உள்ள நவீன வசதிகள் கிராமங்களில் உள்ளதுபோல் செய்வோம். கிராமத்தில் உள்ளவர்கள் புலம்பெயர்ந்து சென்னை வந்து சாக்கடையோரம் வசிக்கும் அவலம் நீங்கும்.

தொழிற்புரட்சி பொருளாதாரம். பெரிய பில்லியன் டாலர் கம்பெனிகள் 50 இருந்தால் நாட்டுக்கு எவ்வளவு லாபமோ, அதே அளவு 5 லட்சம் சிறுகுறு தொழில் முதலீட்டாளர்கள் தொழில் செய்யும்போது அதற்கு சமமான தொழிற்புரட்சி ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம்.

நம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் படித்த தொழிலாளர்களாக இல்லாமல் வேலை வாய்ப்புகளை அடுத்தவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் முதலாளிகளாக மாற்றும் திட்டம். இது எங்களைப் பொறுத்தவரை இரண்டாவது சுதந்திரப் போராட்டம். ஒரு மனிதன் சுபிட்சமாக வாழ இந்த வேலையில்லாத் திண்டாட்டம் அறவே ஒழிய வேண்டும்.

பெண் சக்தி திட்டம், பல முறை நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் ஒன்றுதான். ஆனால், அதைக் கிண்டலடிக்கும் போக்கு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் ‘பெய்ஜிங் அறிவிப்பு’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘பெண் சக்தி’ என்கிற திட்டம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் அந்தத் திட்டம். அது சாத்தியமுள்ள செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம்.

சூழியல் சுகாதாரம், பசுமைப் புரட்சி. இது எல்லோரும் சொல்வதுதானே என்று கேட்கலாம், இது யாரும் யோசிக்காத ஒன்று. அதை நாங்கள் யோசித்து வைத்துள்ளோம். அதற்காகத் தனி அமைப்பை நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்.

இவையெல்லாம் எங்கள் திட்டம். அதில் முக்கியமான ஒன்று வறுமைக்கோட. வறுமைக்கோடு என்று சொல்கிறோம். அந்த வறுமைக்கோட்டை அளவுகோலாக வைப்பதை நாங்கள் விமர்சிக்கிறோம், செழுமைக்கோடுதான் எங்கள் நோக்கம். ஒருவனை வறுமைக்கோட்டுக்கு மேலே தூக்கி வைத்துவிட்டால் பிரச்சினை தீராது. செழுமைக்கோட்டுக்கு மேலே தூக்கி வைக்கவேண்டும்.

இந்த மாதிரியான திட்டங்களை விவரிக்கும்போது சாத்தியமா என்கிறார்கள், கண்டிப்பாக அதைச் செய்து பார்த்தவர் அதைச் சொல்லியிருக்கிறார்”.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x